அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. 'சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.
இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் 'ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கிவைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக்கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டிக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்ககளமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...
மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய 'குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையனிந்த எமது தோழர்கள்.
'சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துவிட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த தீட்சிதர்கள் அதனை மதிக்கவில்லை. ஆறுமுகசாமி பாடத் தொடங்கியவுடன் கருவறையை மூடினார்கள்; நடராசனுக்குக் குற்க்கே நந்தியாய் மறைத்து நின்றார்கள். சூதிரன் வாயிலிருந்து வரும் நீச பாஷையான தமிழ், இறைவனின் காதில் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஊளையிட்டார்கள் ஆறுமுகசாமியை அடித்தார்கள்: அரசு ஆணையை அமல் படுத்த வந்த போலீசு அதிகாரிகளையும் தாக்கினார்கள். ஆயிரமாண்டுகளாய் இந்த மண்ணைப்பிடித்தாட்டி வரும் சாதிப்பேய் மலையேற மறுத்து 'ஊழிக்கூத்து' ஆடியதை அன்று நாடே கண்டது; நடராசனும் கண்டான். இந்தப் பார்ப்பன வெறிக்கூத்தை வென்றடக்கிய பின்னர்தான் அம்பலத்தில் ஏறியது....தமிழ்!
இது நெடியதொரு போராட்டம், சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாடப் பலமுறை முயன்றிருக்கிறார் ஆறுமுகசாமி. ஒவ்வொரு முறையும் அவரைத் துரத்தியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். "தேவாரம் பாடத் தடையா, இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று துண்டறிக்கைகளை அச்சிட்டுத் தனியொரு மனிதனாக நின்று சிதம்பரம் கோயிலுக்கு வருகின்ற பக்தர்களிடமெல்லாம் விநியோகித்திருக்கிறார். பயன் ஏதும் விளையவில்லை.
8.5.2000 அன்று தன்னந்தனியனாகச் சிற்றம்பல மேடை ஏறிப் பாடத் தொடங்கினார் ஆறுமுகசாமி. வாய் திறந்து அடியெடுத்த மறுகணமே அவரை அடித்து வீசினார்கள் தீட்சிதக் காலிகள். ஆடல்வல்லான் சாட்சியாக நடந்தது இந்த அட்டூழியம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த கையுடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுகசாமி, ஒப்புக்கு ஒரு வழக்கு பதிவு செய்தது போலீசு. 'சாட்சியில்லை' என்று தீட்சிதர்களை விடுவித்தது நீதிமன்றம். வழக்காடக் காசில்லாமல், இலவசமாய் வாதாட ஒரு வக்கீலைத் தேடி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழ்க்குரைஞர் ராஜுவிடம் வந்து சேர்ந்தார் ஆறுமுகசாமி. " இது வெறும் மனித உரிமைவழக்கல்ல; மக்களை நசுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனியச் சழக்கு" என்பதால், ஆறுமுகசாமியை ம.க.இ.க.வின் தமிழ் மக்கள் இசைவிழா மேடைக்கு அழைத்து வந்தார் வழக்குரைஞர் ராஜு. "தீட்சிதர்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழை அரங்கேற்றுவோம்!" என ஆயிரக்கணக்கான மக்கள்முன் அன்று அறிவித்தோம்.
கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகண் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்புய் மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.
'சிற்றம்பலத்தில் தேவாடம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த மிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் 'சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப்பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்...பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!
"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்டிக்கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்" என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்...நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.
அன்று அப்பாவி சிவனடியாரை அடித்து வீழ்த்திய தீட்சிதர்கள் ஆத்திகர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற ஆதீனங்கள் அனைவரும் ஆத்திகர்கள்தான். சைவமும் தமிழும் பிசைந்து வயிறு வளர்ந்த்த இந்தத் துறவிகளோ, பட்டங்களும் விருதுகளும் சூடிய சைவ அறிஞர்களோ திருச்சிற்றம்பல மேடையேறுவதை நாங்களா தடுத்தோம்? ஆதீனங்களாலும் ஆன்மீகவாதிகளாலும் ஏளனம் செய்து புறக்கணிக்கப்பட்ட பிறகுதான், ஆண்டவனை மறுக்கும் கம்யூனிஸ்டுடளான எங்களைத் தேடி வந்தார் ஆறுமுகசாமி.
சைவ மெய்யன்பர்களெல்லாம் பதவியும் பவிசும் பெறுவதற்காக பார்ப்பனக் கும்பலுடன் கள்ள உறவு வைத்திருப்பதனால்தான் சிற்றம்பல மேடையில் தமிழன் ஏற முடியவில்லை. தமிழைத் தம் பிழைப்புக்கான கருவியாக மாற்றிக் கொண்ட கட்சிகளும் அமைப்புகளும் செய்துவரும் துரோகத்தினால்தான் ஏழைத் தமிழ் அம்பலமேற முடியவில்லை. இல்லையென்றால் தேவாரத்தை மீட்டெடுத்த தில்லைக் கோயிலிலேயே அதனைப் புதைப்பதற்கு தீட்சிதர்களால் இயன்றிருக்குமா?
சிற்றம்பலத்தில் தமிழை ஏற்ற, தாய்மொழியில் இறைவனைப் போற்ற பக்தனுக்கு அரசாணையின் துணை எதற்கு? போலீசின் துணைஎதற்கு?
சட்டம் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்க முடியாது. அந்த உணர்வென்பது பக்தி உணர்வல்ல. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சுயமரியாதை உணர்வு. சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிரான சமத்துவ உணர்வு. சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு எதிரான தமிழ் உணர்வு.
தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி ஒரு துவக்கப்புள்ளி. தீட்சிதர்கள் சரணடையவுமில்லை, சாதி ஆதிக்கத்தை விடவுமில்லை. நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் ஒரு அவமானச் சின்னமாக இன்னும் நின்று கொண்டிருக்கிறது. அது தகர்க்கப்பட வேண்டும். தீட்சிதர்கள் திருடிக்கொண்ட தில்லைக் கோயிலை அறநிலைய ஆட்சித்துறை கைப்பற்ற வேண்டும்.
சமஸ்கிருத வழிபாட்டை அகற்றுதல், தமிழ் வழிபாடு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராதல்... என நீண்டதொரு போராட்டத்தை நாம் நடத்த வேண்டியிருக்கிறது. நடத்துவோம்!
வர்க்கம், சாதி, இனம், மொழி, பாலினம் போன்ற ஒவ்வொரு துறையிலும் நிலவும் ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் போராடுவோம்! அன்று, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவரங்கம் கருவறைக்குள் நுழைந்து அரங்கநாதனைத் தீண்டினோம்! இன்று, சிற்றம்பலத்தைத் தீண்டியிருக்கிறது தமிழ்! எல்லாவகைத் தீண்டாமைகளையும் ஆதிக்கங்களையும் எதிர்த்துப் போராடுவோம்!
உங்கள் துணையுடன் வெற்றியும் பெறுவோம்!
இவன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னனி
புரட்சிகர மாணவர்...இளைஞர் முன்னனி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி
தொடர்புக்கு:
இரா. சீனிவாசன்,
#16, முல்லைநகர் வணிக வளாகம்,
2 ஆவது நிழற்சாலை,
அசோக்நகர்,
சென்னை 600083.
தொலைபேசி: 23718706
கைபேசி: 9941175876.